Posts

Showing posts from October, 2022

நரை முடி இளைஞர்கள் பகுதி-2

நரை முடி இளைஞர்கள் பகுதி-2 காலை ஆறு மணிக்கு ரெடியாகி, குளியல் பிறகு என முடிவெடுத்து, ஐந்து ரூபாயில் டீ குடித்து, Great Canyon of India என்ற இடத்தை அடைந்த போது வாவ் எனச் சொல்லத் தோன்றியது. நேற்றைய இரவு இருளில் ஒன்றும் தெரியலே. பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, மலையை இரண்டாகப் பிளந்த பென்னாறு ஆறு சுமார் நூறு அடி பள்ளத்தில் ரம்மியமாய் காட்சி அளித்தது. மேகக் கூட்டத்திலிருந்து சூரியனார் சிவப்புப் பந்தாய் ஏழு மணியளவில் வெளி வந்தார்.்நெருப்புக் கோளத்தை வித விதமாய் நண்பர்களுடன் கிளிக்கி முடித்து, அருகிலுள்ள கோட்டைக்குப் பயணம். கோட்டைக்குள்ளே சார்மினாரும்,மசூதியும், கோயிலும் இருந்தன. மிகப் பழைய தோற்றத்துடன். தொல்பொருள் ஆணையம் வசமிருந்தாலும் பராமரிப்பில்லை. அறைக்குத் திரும்பி குளித்து, தயாராய் இருந்த காலை உணவை முடித்து அறையைக் காலி செய்வதற்கு முன் மீண்டும் பள்ளத்தாக்கு சென்று, ராஜி மட்டும் கீழே சென்று படமெடுத்து வந்தான். மீண்டும் பயணம், சுமார் 70 கிமீ பேலம் குகைகளுக்கு (Belum Caves). அங்கே அடைந்த போது நண்பகல் கடந்து வெயில் சுட்டது. குகையை மலைகள் நடுவே கண்கள் தேடின. சுமார் 500 மீ நடந்து, நுழைவுச் சீட்...

நரை முடி இளைஞர்கள்

  நரை முடி இளைஞர்கள் பயணிக்கனும்னு நினைச்சுட்டா என் பேச்சை நானே கேக்கறதில்லே. இந்த தடவை ஆந்திரா பக்கம் போகலாம்னு இரண்டு இடம் தேர்வு செஞ்சாச்சு. தனியாகவா நணபர்களோடவானு டாஸ் போட்டு, பால்ய சினேகிதர்கள் அசோக், ராஜேந்திரன் வருவதாக முடிவானது. சென்னையிலிருந்து ராஜி, திமலையிலிருந்து அசோக். 13/2 அசோக் மடிவாலாவில் பஸ்ஸில் வந்து இறங்க ஒரு சிறிய குழப்பத்தால் அவர் ஒரு கிமீ நடந்து காருக்கு வர வேண்டியதாயிற்று. குட் டீ மடிவாலாவில் குடிச்சுட்டு கண்டோன்மென்ட் இரயில் நிலையம் சென்ற சில நிமிடங்களில் ட்ரெயின் வரவும், ராஜி எங்களுடன் சேர்ந்து கொள்ள நாங்கள் மூவரானோம். பெல்லாரி ரோடை அடைந்து ஏர்போர்ட் கடந்து பயணித்து ஒரு தாபாவில் மத்திய உணவருந்த நிறுத்தம். ரோட்டிகளும் முட்டை மசாலாவும் உள்ளே போனதும் மீண்டும் பயணம். சுமார் 290 கிமீ பயணம். கூகுள் அண்ணா வழிகாட்டி. தேசிய நெடுஞ்சாலை, ஸ்டேட் நெடுஞ்சாலைனு பயணம் தொடர்ந்தது. இருட்டறதுக்குள்ளே போயிடலாம்னு தப்புக்கணக்கு வேற. பாய்லர் டீ தேடி பல கிமீ பள்ளம் மேடான ரோடுகள்ளே பயணிச்சு, கிருஷ்ணாபட்டினம் நெடுஞ்சாலைப் பிரிவுலே விதவிதமான டீ சுவையோட கடைலே இஞ்சி டீ அருமையா கிடைச்ச...

தெளிவு தோன்றுமா ?

  காளை பூட்டிய ஏரால் உழுத நாட்கள் சிறப்போ கால்சராய் அணியாத கோவணமும் வெற்று உடம்பும் சிறப்போ கற்றது கண்டது காதினில் கேட்டது எல்லாமே சிறப்போ பெற்றது பெரிதாய் நோய்கள் பலவும் வாழ்வினில் சிறப்போ ஆயிரம் அறிவுரை ஆரோக்ய வாழ்விற்கு வகை வகையாய் ஆடைகள் முதலாய் அணிகலன் வரையில் அத்தனை வகைகள் சோதனை போலே கூடவே வேதனை தரும் நோய்களும் சோதித்துப் பார்க்க நேரமும் இல்லை உயிரின் பயம் மாற்றங்கள் அனைத்தும் நல்லதா கெட்டதா பாப்பையா பட்டிமன்றம் சீற்றங்கள் கூட புதிதாய் ஆங்காங்கே புரட்டிப் போட்டுவிட குழப்பம் மனதில் கேள்விகள் ஆயிரம் விடைகளும் பலவாய் குடிப்பதில் சிறந்தது ஊரணி நீரா கேள்வி மனதில் கூட்டிக் கழித்து விடைதேடி வாழ்க்கை ஏடுகள் புத்தகமாய் கூடுவிட்டு ஆவி போகும் முன்னே தெளிவு தோன்றுமா ?

எத்திசை போனாயோ

  நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சிலே மோதுதடி குத்தம் உனதில்லே குறுகுறு கண்ணும் குவிந்த உதடுமே சத்தமில்லா தோட்டத்துலே சாயங்கால நேரத்துலே நாமிருந்த நாட்களது கத்த நினைச்சாலும் உதடுகள மூடியது ஞாபகம் இருக்கா முத்தங்க பரிமாறி மூச்சு முட்ட நின்ன கதைகேளு சொத்தே சொந்தமே விரலோட விரல் கோத்த சுகமே மொத்த கதை சொல்ல ஒருபாட்டு போதாது பெண்ணே சுத்த வச்சுப் போனவளே எங்கே நீ காணலியே வத்திய ரத்தம் சுருங்கின தோலு நடையிலே தளர்வு முத்திய உடம்பு ஆனாலும் உன் நினைப்பு போகலேடி எத்திசை போனாயோ யோசிச்சு பெருமூச்சு உனைவந்து சேருமோ எத்தனை நாட்கள் ஏங்கிக் காத்திருக்கேன் எனைவந்து சேர்வாயா

விழித்திரு

  மனித மனம் ஒரு புதையல் இனிது தேடி அலைதல் இயல்பு கனவு பலவும் உலவும் ஆலயம் கற்பனை ஊற்று காலம் கடந்தது வாழ்க்கைச் சக்கரம் சுழல்வது தொடரும் வாடிக்கை உயர்வதும் தாழ்வதும் மாற்றங்கள் வசப்பட வைப்பது நம்மிடம் உள்ளது கசப்பினை மறந்து கன்னலை சுவைக்க உறுதியை நிறுத்தி உள்ளத்தை செதுக்கினால் உனக்கென பாதையை உருவாக்கி பயணிக்கலாம் கணக்கிலா செயல்கள் கண்ணுக்கு அருகினில் இணக்கம் இருப்பின் தேர்வது உன்னிடம் தொலைவில் இருப்பதும் அருகினில் வந்திடும் தொல்லைகள் களைந்து தொடர்வதும் சாத்தியம் விடைகள் தேடியே விடியாத இரவுகள் விடிவெள்ளி கண்டதும் சிவந்திடும் கீழ்திசை விழித்திரு தொடர்ந்திடு வசப்படும் வாழ்க்கை விதியென வீணே முடங்கிடல் வேண்டாம்

மறுபடி பிறப்பின்

  மறுபடி பிறப்பின் எதுவாகப் பிறக்கலாம் மனதிலே தோன்றிய வினாவுக்கு விடையெதுவோ பறவையாய் பறந்து உலகை வலம்வரவா பசும்புல்லாய் பரவி பனியில் நனையவா பாயும் மானாய் குதித்தோடிச் செல்லவா நாயும் நரியும் புலியும் நன்றா காட்டு மரமாய் ஓங்கி வளரவா கானக மயிலாய் தோகை விரிக்கவா நதியாய் மாறி நாடெங்கும் சுற்றவா விதியது உண்டெனில் எதுவாய் பிறப்பது மதியினில் கேள்வி விடைதேடிச் சென்றது மனதில் வந்தது இதற்குப் பதிலாய் மனிதனாய் வேண்டாம் திருந்தாத பிறவி மற்றதாய்ப் பிறந்தாலே வாழ்வினில் அமைதி என்றொரு வாக்கு எங்கிருந்தோ வந்தது எண்ணிப் பார்த்தேன் கூற்று சரிதானோ ?

பெண்மயிலே

  தென்னைமரத் தோப்புக்குள்ளே தெம்மாங்கு பாட்டுப்பாடி பின்னலிடை அசைந்தாட போறவளே பெண்மயிலே என்னைக் கொஞ்சம் பாரடியே கண்ணாலே சொன்ன சொல்லை மறந்தனையோ சிங்காரி வண்ணச் சேலையிலே வடிவான சிலையோநீ எண்ணமெலாம் நானிருக்க நாணமென்ன உனக்கு மாமரக் குயில் பாட்டைப் பாடலியோ தேமதுரத் தமிழோசை நாவினிலே காணலியே கால்கொலுசு சத்தமென்ன தாளமிடும் நடையோ பால்மனசுக் காரியே காரிகையே எங்கேநீ கரும்புத் தோட்டத்திலே கன்னம் சிவந்தாயோ கருங்கூந்தல் பின்னல் இடையாட நடந்தாயோ சோளக் காட்டுக்குள்ளே போனவளே சின்னவளே சோடிசேர நானும் வாரேன் நில்லடியே !

குரங்காய் தாவுது

  மனசெல்லாம் மத்தாப்பூ குரங்காய் தாவுது இங்கும் அங்கும் மலையேறுது மனம் மாறுது உருமாறி உலகம் சுற்றுது கடல் மேலே அலை மேலே ஆடிப் பாடுது உடல் விட்டு ஆவியாகி மலை மேலே தாவுது சிகரம் தொட்டு மரங்களில் தாவி பள்ளத்தில் பாயுது சிலநேரம் ஆற்றோடு ஓடோடி கரை சேரப் பாக்குது கணநேரம் காற்றாகி கண்டம் விட்டு கண்டம் தாவுது கண்மூடி கண்சிமிட்டி நட்சத்திர உலகில் நடனம் ஆடுது பூமியைத் துளைத்து ஆழச் சென்று நெருப்போடு விளையாடுது பூட்டுப் போட்டு அடக்க நினைத்தால் வேகம் கூடுது சுத்தவெளி எதுவென்று தெரியாமல் விண்ணில் சுற்றி வருது நித்தம் இதன் தொல்லை கட்டுக்குள் அடங்க மறுக்கிறது

குழப்பம் மனதில்

  யாருக்கும் நேரமில்லை கேட்கவும் மனதில்லை யாசகம் செய்துமிங்கே எதுவுமே மாறவில்லை முடிவில்லாப் பயணமிது மீள்வது கடினமே கடிவாளம் இருந்தும் கட்டிலடங்கா ஓட்டம் ஓடிய கால்கள் ஓய்ந்திடும் ஒருநாள் ஆடிய ஆட்டங்கள் அடங்கிடும் அந்நாள் கண்கள் குருடாகின காதுகள் செவிடாகின எண்ணங்கள் சுருங்கி ஏளனம் செய்தன கற்றதும் கேட்டதும் காணாமல் போயின வற்றிய குளமாய் அறிவும் மழுங்கியே கடிகார முட்கள் பின்னோக்கி சுழன்றன விடியாதா ஏக்கம் இரவுகள் நீண்டன கணக்குப் புத்தகம் பெரிதாகிப் போனது கனவுகள் நீண்டதாய் முடிவில்லா இருளில் குழப்பம் மனதில் கற்பனைச் சிக்கல் குறுகத் தரித்த கவிதை நெடியதாய்

மதமென்ற மதம்

  என்றோ விதைத்த தவறான விதை இன்று ஆலமரமாய் வளர்ந்து பெரிதாகி கொன்று புதைத்தாலும் மீண்டும் மீண்டும் நன்று இதுவன்று சொல்வதைக் கேட்பாரில்லை என்று மாறிடும் என்ற கேள்வி தொன்று தொட்டே உண்டு மனதில் பன்றி சாக்கடையைத் தேடியே போவதுபோல் வென்று வரும் நாளும் உண்டோ மதமென்ற மதம் பிடித்த உள்ளங்கள் இதமாய் வார்த்தைகள் இவரிடம் இல்லை நிதமும் சாதியைத் தலையில் தூக்கி பேதங்கள் பேசித் திரிவர் பேய்க்குணமே வாதங்கள் வளர்ந்து வழக்காடி தொடர்வர் முடிவுரை எழுத முடியாத பெருந்தொடராய் விடிவே இல்லாத இரவுகள் தொடர்கதையாய்

எவையும் இனிமை

  வானம் மேலேறி வலம் வந்து காலம் கணக்கின்றி் உலகம் சுற்றி ஞாலம் பெரிதென்று உணர்ந்து திரும்பி பாலம் மனித மனமா ஆராய்ந்து கோலம் புள்ளியோடு வளைந்து நெளிந்து மூலம் தெளிவற்ற சிந்தனை பிறக்க நாலும் கற்றாலும் நாறும் பிரிவினைகள் நாக்கு சுத்தமெலாம் போனதெங்கே நரனே வேணும் மனதில் தெளிவே என்றும் காணும் எவையும் இனிமையாய் உணர எத்தனை காலம் வேண்டும் உனக்கு

நாடுவது அமைதி

  உறங்காத இரவுகள் உறைந்த நினைவுகள் மறக்காத ஞாபகங்கள் மறைந்தே மனதிற்குள் துறந்தும் மறந்தும் தொலைத்த நாட்களுமே துயிலும் இறுதியி்லே இணைந்து புதைந்திடுமே கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்வினிலே கடைசிவரை தொடரும் கலங்கும் சிலநேரம் காலச் சக்கரம் சுழன்றே இருக்கும் கானல் நீராக கரடு முரடாக ஓடுவது ஓடட்டும் ஆட்டம் முடிவுவரை நாடுவது அமைதி ஒன்றே நல்மனதில் கூடிவருமா கூக்குரல் எழுப்பிக் கேட்கிறேன் கூடுவிட்டுப் போகுமுன்னே நிசப்தம் நிலவட்டும்

புள்ளிக் கோலங்கள்

  தெருவெங்கும் புள்ளிக் கோலங்கள் வாயிலெங்கும் மாவிலைத் தோரணங்கள் புத்தரிசி புதுப்பானை பொங்கல் கரும்பு மஞ்சள் காய்கறிகள் புத்தாடை உடுத்திய மக்கள் பொங்கலோ பொங்கல் உரக்கச் சத்தம் வண்ணம் பூசிய மாட்டின் கொம்பு புதுப் பெண்ணாய் மாறிய கிராமத் தோற்றம் நெற்கதிர்கள் அடுக்கிய களத்து மேடு ஒலிபெருக்கியில் அலறும் வினாயகர் பாட்டு முச்சந்தியில் தெருக்கூத்து மேடை நாளைய தெருக்கூத்து நகல் இன்று சிறுமியர் கால் கொலுசும் மாட்டின் சலங்கை சத்தமும் நலம் விசாரிக்கும் உறவுப் பட்டாளம் மலை உச்சியில் தோன்றி உயர்ந்த கதிரவன் உலா வந்த கண்களின் காட்சிகள்

பொங்கல்

  பொங்கலோ பொங்கலென்று உரக்கச் சொல்லிடுவோம் நீங்களும் நானும் சேர்ந்தே பொங்கிடுவோம் புத்தாடை உடுத்தி புதுப்பானை பொங்கல் சத்தான கரும்பும் மஞ்சளும் கூடவே அத்தானும் அம்மாவும் அழகுச் செல்வங்களும் அருகினிலே இருக்க கொண்டாடி மகிழ்வோம் மஞ்சளும் மாவிலையும் காய்கனியும் படையலிட்டு கதிரறுத்த புத்தரிசிப் பொங்கலும் இலையிலிட்டு கற்பூர ஆரத்தி எடுத்தே வணங்கிடுவோம் இயற்கை இறைவனாய் காளை கடவுளாய் இதயத்தில் இருத்திப் போற்றி மகிழ்வோம்

அவனருளே

  காற்று சுமந்த அன்பு கடல் கடந்தும் சேரும் ஊற்று போன்ற காதல் கண்களில் உறைந்து நிற்கும் நேற்று நடந்த நிகழ்வு நிழலாய் உள்ளம் அடையும் பற்று அற்ற வாழ்வும் பாசம் என்பதை உணரும் கற்று தேர்ந்த அறிவு கடைசி வரை தொடரும் சற்று எட்ட நின்று பார்ப்பின் உண்மை விளங்கும் தொற்று நோய் போன்றதே உற்ற நட்பின் உறவும் முற்றுப் பெறாது வாழ்க்கை முதுமைப் பருவம் இன்றி நாற்று நட்ட வயலில் நெல் மணிகள் அழகே போற்று இறைவனை தினமும் நல்வாழ்வு நல்கியது அவனருளே !

தினமும் விடியல்

  பெங்களூரு குளிர் எழுப்பிய காலை காக்கையும் புறாவும் சேர்ந்த கூப்பிடும் சத்தம் இளமை வெயில் குளித்த கட்டிடங்கள் மீண்டும் வார இறுதி வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு அறிவிப்பு இந்த சுதந்திரப் போராட்டம் இயற்கையை எதிர்த்து நாட்கள் மாதங்களாய் வருடங்களாய் தொடர்ந்து மரண பயத்தில் பல உள்ளங்கள் முடிவே இல்லாத தொடர்கதையாய் உண்மைகள் திரிக்கப்பட்டு ஊடகங்களில் வைரசை விட வேகமாய் பரவிக் கொண்டு எவன் விதைத்த விதையென்று தெரியாத புதிர் பணப்பேய்கள் ஆரவாரமாய் நடனமாடும் செய்திகள் உலகத்தை ஆட்டிப் படைக்கும் மாய சக்திகள் விடை காணாமலே தினமும் விடியல் தொடர்கதையாய்

புத்தாண்டு

  வந்தது புத்தாண்டு வளம்பெற்று வாழ்கவே சொந்தமும் பந்தமும் சேர்ந்தே வாழ்கவே நன்மைகள் பெருகிட நானிலம் வாழ்கவே நல்லவர் தலைமையில் நாட்டினர் வாழ்கவே கற்றவர் முன்னிலை பெற்றே வாழ்கவே பெற்றவர் பெருமை பெற்றிட வாழ்கவே சுற்றமும் நட்பும் சூழ்ந்திட வாழ்கவே அற்றவர் வறுமை போக்கியே வாழ்கவே வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை ஓங்கவே நற்றமிழ் பாக்கள் என்றும் வாழ்கவே

மெல்ல நட தாயே

  மெல்ல நட தாயே சின்னப் பாதம் நோகாம கன்னக் குழிவிழ சிரிப்பாயே செல்லப் பாப்பாவே செங்கரும்பே **** உப்புமூட்டை தூக்கும் தொழிலாளியின் வியர்வை உப்புக் கரித்தது **** இரவுக்கு விடை கொடுக்க கதிரவக் காவலாளி வந்தான் **** அலை மகள் கரையோரம் மணல் காதலனை முத்தமிட்டாள் **** மேகப் போர்வை விலக்கி நிலவுப் பெண் சிரித்தாள்

சொல்ல மறந்த கதைகள்

  மெல்ல நடத்து வந்து மெதுவாக தொட்டுப்போ சொல்ல மறந்த கதைகள் சொல்லி விட்டுப்போ கள்ளம் கபடமற்ற சிரிப் பொன்றைத் தந்துபோ உள்ளம் திறந் தென்னை உச்சி முகர்ந்துபோ ஓடாதே நின்றேசெல் ஓய்ந்தன என் கால்கள் தொடாத தூரத்தில் போய் நின்று கொண்டாயே பாடாத பாட்டெல்லாம் பாடிக் களித்த நாட்கள் பாசப் பிணைப்பிலே கட்டுண்ட எண்ணற்ற தருணங்கள் மறந்து போகவில்லை மறுபடி மனதில் வந்தமர்ந்து உறக்கம் மறுத்து உள்ளத்தே நடனமடாடி நின்றதுவே ஆயிரம் கதைகள் அத்தனையும் காவியம் போல் ஆனதடி ஆரணங்கே போனதெங்கே சொல்வாயா இன்றேனும் தேடிவரக் காத்திருக்கேன் தெற்குத் திசை தானா ஓடிவந்து எனை யணைத்துக் கொள்வாயா சொல்

சிலுவையில் மறைந்தான்

  விண்ணிலிருந்த நட்சத்திரங்கள் வீடுகளில் தொங்கின பண்ணிசைத்துப் பாடல்கள் திக்கெட்டும் முழங்கின கண்விழித்து நண்பர்கள் கடவுளைத் தொழுதனர் கணக்கற்ற மாதாகோவில்கள் விளக்கொளியில் மின்னின வண்ணமலர்கள் வாணவேடிக்கை பச்சை மரங்கள் வகைவகையாய் பலூன்கள் ஒளிரூட்டும் மெழுகுவர்த்திகள் இறைவன் பிறந்தான் மனித வடிவில் கறைகள் சுமந்து சிலுவையில் மறைந்தான் உலக மக்கள் துயரம் போக்கிட உயிர்த்து வருவான் என்றே காத்திருப்பேன்

கற்பனை

  கற்பனை உலகமொன்றில் உள்நுழைந்தேன் விற்பது அனைத்தும் புதுமை நூற்பது நூலாடைகள் பட்டாடைகள் நாற்புறம் பல்வகை கடைத்தெரு கற்பது நடைமுறை விஞ்ஞானம் நற்பலன் எதுவென்ற விளக்கம் வேற்றுமை எதிலும் இல்லை ஒற்றுமை மனிதம் எங்கும் எல்லைகள் இல்லை எங்கும் சொல்லில் வன்மம் இல்லை அனைத்தும் சமமாய் அன்பாய் அவரவர் தேவைக்கு உழைப்பு உயர்வு தாழ்வு எங்குமில்லை உலகமனைத்தும் மதமற்றே கண்டேன் இதமாய் மனதில் அமைதி இதுவே வாழுமிடம் மகிழ்ந்தேன் சத்தமொன்று கேட்டே விழித்தேன் சாதிச் சண்டை தெருவினில்

காலத்தின் சுழற்சி

  கலவியின் களைப்பு காலையில் கலையும் உலவிய காற்றில் காதலின் வாசம் நிலவின் வானில் நிறையவே தாரகைகள் புலர்ந்த போதிலே ஒன்றாய்ப் போனது மலரின் வாசம் மறைந்து சுருங்கி உலகின் நியதி உணர்த்தி நின்றது பலவும் கற்றது உள்ளே உறங்கிற்று நிலவும் அமைதி நிர்மல மனதில் காலத்தின் சுழற்சி கடைசி வரையில் பாலமான உறவுகள் கூடவே பயணம் நலமான வாழ்வு என்றும் தொடரும்

எங்கள் காலனி

  காலையிலே எழுந்து கீழ்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிரில், நியூ ஆவடி ரோட் சந்திப்பில் உடற்பயிற்சி மைதானத்தில் தண்டால்,புல் அப்ஸ், பேரலல் பாரில் உடம்பை ஏற்ற முயற்சித்த நாட்கள். அந்தோணி உடம்பைப் பார்த்து பொறாமைப் பட்டதுண்டு. பல நடிகைகளின் உதவியாளர்களும் பயிற்சி செய்வர். எங்கள் காலனி சுற்றி சினிமா சம்பந்தமான விசயங்கள். நியூடோன் ஸ்டுடியோ, சிட்டாடல் ஸ்டூடியோ,டைரக்டர் ஸ்ரீதர் வீடு, தேவி தியேட்டர் ஓனர் வீடுன்னு. சோ வின் ஆரம்ப காலம் அது. எங்கள் காலனி வழியாக அவர் நடந்து செல்வார், சிறுவர்கள் பலரும் முண்டைக்கண் என கேளி செய்வர். அலை ஓசை பத்திரிக்கை ஆபிஸை கொளுத்தியது அருகிலே. ஐந்து லட்சம் என்ற சினிமா ஷூட்டிங் நடந்தபோது குட்டி பத்மினி மீது ஆசைப்பட்டதும் உண்டு. விஜயகுமார், மஞ்சுளா வீடு எங்கள் காலனிக்கு நேர் எதிரில். அந்தோணி சில காலம் சத்யா ஸடூடியோவில் டைம் கீப்பராக இருந்த போது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் பகிர்வான். தெரிந்தே விளக்கில் விழும் விட்டில் பூச்சி போன்ற பெண்களின் கதைகளும் உண்டு. எம்ஜிஆர் நடித்த நவரத்னம் சூட்டிங்கை மறைந்து பார்த்த அனுபவமும் உண்டு. சுரேஷூம் எங்களோடு வந்ததாக ந...

பழைய நினைவுகள்

  ஊரெங்கும் வண்ணக் கோலம் அதன் நடுவே பூசணிப்பூ உடல் நடுங்கும் குளிரினிலும் ஊராரின் பஜனைப் பாட்டு ஊர்க்கோடி கம்பத்தில் உரக்கப் பாடும் சாமிப்பாட்டு நீராடி தலையைச் சுற்றி தலைப் பாகைப் பெண்கள் வண்ணக் கோலமுடன் வண்ண வண்ண பறவைகள் போல் ஆலயமணி ஓசை ஓயாமல் ஊடே ஒலிக்கும் சத்தம் கூடவே பால்காரன் சைக்கிள் மணி வீதி தோறும் குளிரென்றும் பாராமல் கிணற்றில் குதித்து நீராடும் சிறுவர் தெருக்கோடி டீக்கடையில் சூடான பால் கொதித்து தேநீராகும் பழைய நினைவுகள் தான் மறந்த நாட்களாய் அசைபோட

ஓடிப் போலாமா

  ஓடிப் போலாமா ஊரெல்லாம் சுத்தலாமா கூடிக் களிச்சு கும்மாளம் போடலாமா ஏரிக்கரை மேலே ஏறிக் குதிப்போமா ஏலேலோ பாட்டுப்பாடி ஏத்தம் இறைப்போமா காட்டுக்குப் போயி மஞ்சம்புல் பறிப்போமா வீட்டுக்குள்ளே ஒளிஞ்சு கண்ணாமூச்சி ஆடுவோமா மலையுச்சி போயி மச்சானை கூப்பிடுவோமா தலைமேலே ஆட்டுக்குட்டி தூக்கிச் சுமப்போமா மாமரத்து மேலேறி மாங்கா பறிப்போமா மாமனோட வீட்டு கடலை கொறிப்போமா ஆடுபுலி ஆட்டமாட அரசமரம் போவோமா கூடுவிட்டு கூடுபாயும் கூத்தைப் பாப்போமா வீடுவிட்டு நாடுநாடா சுத்தப் போவோமா கூரையப் பாத்துக்கிட்டு எத்தனை நாளோ ஊரைச் சுத்திப் பாப்போம் கிளம்புடா

நல்லுறவு

  நல்லுறவு நட்புறவு நல்வரவு நம்மிடையே சொல்லிலே செயலிலே ஒட்டுறவு ஒப்பில்லாதது எண்ணிலா உறவிலே உன்னத உறவிது என்னையும் உன்னையும் இணைத்திடும் பாலமிது எங்கேயோ தொடங்கி எப்படியோ வளர்ந்து பங்காளிச் சண்டையும் பலவிதக் கருத்தும் இன்றும் என்றும் தொடரும் கதையாய் ஊன்று கோலாய் உதவும் கரமாய் வளரும் வாழும் குனியும் நிமிரும் குரங்காய் தாவும் மானாய் துள்ளும்

உண்மை உணருங்கள்

  பாரதி கண்ட கனவுகள் நனவானதா ஊரதில் உயற்சி தாழ்வு மறைந்ததா உணவின்றி எவரும் இல்லையென்று ஆனதா கணக்கற்ற சாதிகள் இல்லாமல் போனதா கங்கையும் காவிரியும் இணைந்து ஓடுகிறதா அச்சம் தவிர் என்பது என்னானது அச்சினில் வருவது அனைத்தும் உண்மையா ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு என்னானது கற்றதும் கேட்டதும் கடைச் சரக்கா பெற்ற அறிவை மறந்த மானிடமே நற்றமிழ் அறிஞர் நவின்றது மறந்தீர் வெற்று வார்த்தைகள் பேசியே வாழ்ந்தீர் சொல்வதும் செய்வதும் நல்லதே ஆகட்டும் வெல்வது அதுவென்றே உண்மை உணருங்கள்

பழைய நினைப்புடா

  பழைய நினைப்புடா பேராண்டி மனசு துடிக்குது பருவ காலத்து சேட்டை படம் ஓடுது களத்து மேடு கம்மாக் கரை கண்ணுலே களித்துக் குளித்த கிணத்துத் தண்ணி குளிருலே கம்பங் கொல்லை கரும்புத் தோட்ட மறைவு கம்பை ஊணி மலைப் பாதைலே ஆட்டோட கடலைக் காய் காராமணி விறால் மீனு சுடச் சுட சுட்டுப் சாப்புட்ட நாட்கள் காட்டுப் பாதைலே நாட்டுப் பாட்டு மெட்டு சேட்டுப் பயல் தென்னை இளநீ சுவை ஆடடுப் பால கறந்து வெல்ல தேநீர் மாட்டை ஓட்டி கொட்டடி கட்டி கதைபேசி சொட்டச் சட்ட மழையிலே நனைஞ்சு ஆட்டம் கொட்டக் கொட்ட விழிச்சு பாத்த கூத்து வளராம இருந்தா வயசே ஆகாம சுகம்தானே தளராத கால்கள் தாவியோடி மரங்கள் ஏறி சொல்லி மாளாதுடா பேராண்டி போனது திரும்பாது

பாப்பா பாட்டு

  அழகாய்ச் சிரிக்க பாப்பா பாட்டு மழலை பேசும் குழந்தைப் பாட்டு கண்ணைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி பண்ணும் சேட்டை பார்த்துப் பாட்டு இங்கும் அங்கும் உற்றுப் பார்க்கும் இரண்டு கைகளும் உயர்த்திக் காட்டும் சிரிக்கும் முறைக்கும் காரணமின்றி அழும் புரியாத மொழியில் பேசிச் சிரிக்கும் தவழும் நான்கு கால்களில் நடக்கும் தத்தி நடைபோடும் வண்ணம் தேடும் வளரும் பருவத்தில் கண்ணுறவே அழகு வளராதே பாப்பா இப்படியே இருப்பாய் தினமும் நாங்கள் உன்னோடு விளையாட