அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - பாகம் 3
அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - பாகம் 3
புதிய இடமென்றால் உறக்கம் வருவது கடினமென்பது உண்மையாச்சு. காலையில் எழுந்து காலையுணவுக்குப் பிறகு பீமா அருவிக்குப் போவதென முடிவானது. அதற்குள் நண்பர்கள் அந்தோணி, இராசேந்திரன் ஏரியைச் சுற்றி நடைப் பயிற்சி முடித்தும் விட்டனர்.
எங்களுக்கு முன்பே ஒரு குடும்பம் குளித்துக் கொண்டிருந்தது. குளிக்கத் தயாராகி வழுக்கி விழாமல் மெதுவாக பாறையைப் பிடித்து அருவிக்குள் நுழைந்த போது, உயரம் குறைவானாலும் முதுகைப் பிளப்பது போன்ற வேகத்துடன் மேலிருந்து கொட்டியது. ஆசை தீர அருவிக் குளியல் வேண்டுமானால் கூட்டமற்ற இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். நண்பன் அந்தோணி கீழே உட்கார்ந்து வெகு நேரம் குளியல் போட்ட பிறகு வெளிவந்து தயாராகித் திரும்பும் வழியில் புளி,தேன், இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
பனிரெண்டுக்குள் செக் அவுட் பண்ணனும்னு ரெடியாகி, காரை வாணியம்பாடி நோக்கி ஓட்ட ஆரம்பித்த போது சாலை நன்றாக இருந்தது.ஊர் எல்லையில் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளோம் என்று சான்றைக் காட்டிவிட்டு பயணித்து காவனூர் observatory அனுமதி இல்லையென்ற தகவல் தெரிந்தது. ஆசியாவிலே பெரிய வானியல் டெலஸ்கோப்பு இங்குள்ளது.
வழியில் ஓரிடத்தில் நிறுத்தி குரங்குகளோடு விளையாடி, கார்மீதும் குரங்கு ஓடி விளையாடியது. அங்கிருந்து பயணித்து ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி ஊருக்குள் மதிய உணவுக்கு ஓட்டலுக்குள் நுழைந்து சாப்பிட்டு முடிவதற்குள், மிகவும் வேகமான மழை அரைமணி நேரத்தில், வெள்ளக் காடாய் மாறியது. ஆம்பூர் சென்று இரயில் நிலைய வாயிலில் நண்பர்களுக்கு விடை கொடுத்து விட்டு,பெங்களூரு நோக்கி மீண்டும் பயணம்.
கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலை முழுதும் டிராபிக் ஜாமில் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு் சேலம் சாலையில் சென்று திரும்பி வீட்டை அடைய இரவாகி விட்டது. ஏழைகளின் ஊட்டி என்று வேண்டுமானால் ஜவ்வாது மலையை அழைக்கலாம். வேலூர் வழியாகப் பயணிப்பது காட்டு வழியில் கண்களுக்குக் குளிர்ச்சி. திருவண்ணாமலை, வாணியம்பாடி வழியாகவும் செல்லலாம். வார இறுதிச் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். அறை முன்பதிவு செய்து விட்டுச் சென்று சுவையான உணவோடு இயற்கையை ரசிக்க ஏற்ற இடம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை போகலாமெனச் சொன்னார்கள். மழைக்காலப் பசுமை மிக அழகு.
( முற்றும்)
Comments
Post a Comment